மொஹல்லா திட்டம் தான் தேவி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி:“ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மொஹல்லா பஸ்களைத்தான், 'தேவி' என்ற பெயரில் பா.ஜ., அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது,” என, முன்னாள் அமைச்சரும், டில்லி ஆம் ஆத்மி தலைவருமான சவுரவ் பரத்வாஜ் கூறினார்.இதுகுறித்து, சவுரவ் பரத்வாஜ் கூறியதாவது:ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 'மொஹல்லா மின்சார பஸ்' துவக்கப்பட்டது. இதே திட்டத்தை தான் தற்போது 'தேவி' என்ற பெயரில் பா.ஜ., அரசு மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.வழக்கமான 12 மீட்டர் பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்காக அளவில் சற்று சிறிய மின்சார பஸ் இயக்கும் திட்டம் டில்லியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 'தேவி' என்ற திட்டத்தின் கீழ், 400 புதிய மின்சார பஸ்களை முதல்வர் ரேகா நேற்று முன் தினம் துவக்கி வைத்துள்ளார். இதே நோக்கத்தில் தான் மொஹல்லா பஸ்களும் இயக்கப்பட்டன. தற்போது பெயரை மட்டும் மாற்றி வைத்துள்ளனர். இது, டில்லி மக்களை ஏமாற்றும் முயற்சி.ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஒரு திட்டத்துக்கு பெயரை மாற்றி பெருமை அடித்துக் கொள்கின்றனர். மின்சார மொஹல்லா பஸ் திட்டம் 2024ம் ஆண்டு அக்டோபரில் துவக்கப்பட்ட போது, வெளிப்படைத்தன்மையை பேண மத்திய அரசு நிறுவனமான சி.இ.எஸ்.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.அந்த நேரத்தில் டெண்டர் விதிமுறைகளின் கீழ் தேவைப்படும் 50 சதவீத 'மேக் இன் இந்தியா' விதிமுறையை பூர்த்தி செய்யவில்லை. எனவே, அந்த பஸ்களுக்கு சான்றளிக்கப்படவில்லை. அக்டோபரில் விதிமுறையை பூர்த்தி செய்யாத பஸ்களுக்கு இப்போது மட்டும் எப்படி சான்றளிக்கப்பட்டது? பா.ஜ., அரசு டெண்டர் விதிமுறைகளை புறக்கணித்து பஸ்களை இயக்குகிறதா என்பதை விளக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த முறைகேடு அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததா? அல்லது கட்சித் தலைவர்கள் செய்ததா என்ற உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.