மேலும் செய்திகள்
விமானம் ஏறி சென்ற விஜய் வீட்டை விட்டு வரவில்லை: பிரேமலதா
1 minutes ago
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
33 minutes ago
சென்னை:துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை ஆணையத்தின் பரிந்துரைப்படி, போலீஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், நிர்வாக அதிகாரிக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கி இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. துாத்துக்குடி 'ஸ்டெர்லைட்' ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பலியாகினர். 2018 மே மாதம் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், 2022 மே மாதத்தில், அறிக்கை தாக்கல் செய்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே வழங்கிய தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானது எனவும் முடிவெடுத்து, அதற்கான அரசாணை பிறப்பித்தது. விசாரணை
இதை எதிர்த்து, துப்பாக்கிச்சூட்டில் பலியான இளம்பெண்ணின் தாய் வனிதா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், 'துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை; அவர்களுக்கு எதிராக, கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 'பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தலா 1கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என கோரியிருந்தார்.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து, மேல் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். அரசின் பதில் மனுவுக்கு பதில் அளிக்க, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை, ஏப்ரல் 5க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. அரசை கட்டுப்படுத்தாது
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:விசாரணை ஆணையம், உண்மை கண்டறியும் அமைப்பு; ஆதாரங்களை சேகரித்து, அரசுக்கு பரிந்துரை அளிக்க முடியும். ஆணையத்தின் அறிக்கையை, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன் சேர்த்து, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆணையத்தின் பரிந்துரைப்படி, போலீஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்பட்டு உள்ளது.சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக, சி.பி.ஐ.,யும் குற்ற நடவடிக்கையை துவங்கி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, போதிய நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 1கோடி ரூபாய் இழப்பீடு கோரியதை பரிசீலிக்க முடியவில்லை; அது, நிராகரிக்கப்படுகிறது. விசாரணை ஆணையத்தின் அறிக்கை, அதன் முடிவு, அரசை கட்டுப்படுத்தாது. ஆணையத்தின் முடிவு, அறிவுரை தன்மை உடையது. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
1 minutes ago
33 minutes ago