கோவை அரசு பள்ளியில் தி.மு.க., நிகழ்ச்சி; எதிர்ப்பு கிளம்பியதால் அனுமதி மறுப்பு
கோவை; கோவையில் அரசு பள்ளி வளாகத்தில், தி.மு.க., சார்பில் கபடி போட்டி நடத்த எதிர்ப்பு கிளம்பியதால், அனுமதி மறுக்கப்பட்டது.தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வெள்ளலுார் பேரூர் கழகம் மற்றும் இளைஞரணி சார்பில், மின்னொளியில் கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.இப்போட்டி, இன்றும் (4ம் தேதி), நாளையும் (5ம் தேதி) வெள்ளலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது; அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைக்க இருப்பதாக, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. அரசு பள்ளி வளாகத்தில் கட்சி சார்பில், நிகழ்ச்சி நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கலெக்டருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், 'அரசு பள்ளியில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது. பள்ளி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சி நடந்தபோது, தி.மு.க., கண்டித்திருக்கிறது; இப்போது, தி.மு.க., தன்னுடைய ஆட்சியில் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நிகழ்ச்சியை, தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், கோர்ட் வாயிலாக பள்ளிகளின் புனிதம் காப்பாற்றப்படும்' என தெரிவித்திருந்தார்.பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், ''அரசு பள்ளியை கட்சி பள்ளியாக மாற்றும் தி.மு.க.,வின் அராஜகத்தை கண்டிக்கிறோம். போஸ்டர் அச்சடித்து வெளிப்படையாக தி.மு.க., தைரியமாக நிகழ்ச்சி நடத்துவதை, கலெக்டர் பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா? பா.ஜ., போராட்டம் நடத்தும் நிலைக்கு, தள்ள மாட்டீர்கள் என நம்புகிறோம்,'' என்றார்.வெள்ளலுார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாலன் கூறுகையில், ''போட்டி நடத்துவோர், கலெக்டரிடம் அனுமதி பெற உள்ளதாக கூறியுள்ளனர். அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே, போட்டி நடத்த அனுமதிக்கப்படும்,'' என்றார்.கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டபோது, ''அரசு பள்ளி வளாகத்தில் கட்சி சார்பில் போட்டி நடந்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. அரசு சாராத இடத்துக்கு போட்டியை மாற்ற அறிவுறுத்தப்படும்,'' என்றார்.