மயிலாடுதுறை:நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தலை நடத்த தி.மு.க.,வினர் நிர்பந்தித்த நிலையில், பள்ளிக்குள் அரசியல் நுழைய கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடும் எதிர்ப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 998 மாணவ, மாணவிகள் படித்த வருகின்றனர். 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக ஈஸ்வரி ராஜேந்திரன், செயலாளராக பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன், பொருளாளராக கண்ணன் ஆகியோர் பதவி வகித்து வந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் 4 ஆசிரியர்கள், ஒரு கணினி பணியாளர், நான்கு துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பொருளாளர் பதவி வகித்து வந்த கண்ணன் இறந்துவிட்டதால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.நாங்கூர் ஊராட்சித் தலைவர் சுகந்தியின் கணவரான தி.மு.க., பிரமுகர் நடராஜன், தனது கட்சியினரின் துணை கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்தலை நடத்த நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.இதை அறிந்த அப்பகுதி மக்கள், பள்ளியில் அரசியல் நுழையக்கூடாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பங்கேற்கவில்லை
பெற்றோர், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை.கூட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ஏதுவாக பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தற்காலிக பொருளாளராக ஆசிரியர் இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.