உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு குளறுபடி: இபிஎஸ் குற்றச்சாட்டு

மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு குளறுபடி: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: '' கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு குளறுபடி செய்துள்ளது,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.சேலத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் கூறியதாவது:

மேகதாது விவகாரம்

காவிரி நதிநீரை மடைமாற்றம் செய்யவோ, தடுக்கவோ கர்நாடகாவுக்கு உரிமை இல்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சோனியா, ராகுலிடம் பேசி சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என ஸ்டாலின் கூறுகிறார். அக்கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி கர்நாடகாவை ஆட்சி செய்கிறது. தீர்வு காண எளிதான வழி உள்ளது. தவறவிட்டால் தமிழகம் வஞ்சிக்கப்படும்.

அலட்சியம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கை அனுப்பிய போது 2011ம் ஆண்டு மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025 ம் ஆண்டு இந்த ஆண்டின் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை கணக்கிட்டு அனுப்பப்பட்டு இருந்தால், நிர்ணயித்த 20 லட்சம் மக்கள் தொகை கிடைத்திருக்கும். திட்டம் நிறைவேறியிருக்கும். தமிழக அரசு விழிப்புடன் இருந்து விரிவான திட்ட அறிக்கை அனுப்ப வேண்டும்.மெட்ரோ ரயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சியில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், 3 ஆண்டுகள் கிடப்பில் போட்டது. மெட்ரோ திட்டத்துக்கு என்ன விதி உள்ளது என ஆய்வு செய்து அறிக்கை அனுப்பியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. மதுரையிலும் அதே நிலை தான். அதிமுக ஆட்சி வந்ததும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தூக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. பிறகு, சட்டம் ஒழுங்கு எப்படி சீராகும். ராமேஸ்வரத்தில் மாணவியை கொல்லும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலதாமதம் செய்யாமல் நிரந்தர டிஜிபியை நியமிக்க வேண்டும். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டு உள்ளது.

சந்தேகம்

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட் சென்றது ஏன்? பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை திமுக அரசு எதிர்ப்பது ஏன்? யாரை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது? இந்த வழக்கில், யாரோ முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.யார் விசாரித்தால் என்ன? உண்மை வெளியே வந்தால் போதும், குற்வறாளிகள் தண்டனை கிடைத்தால் போதும். ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணையை எதிர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மிரட்டல்

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை.தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்னர்.திநகர் தொகுதியில் அதிக போலி வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கக்கோரி மாவட்டந்தோறும் புகார் மனு அளித்துள்ளோம். எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். தேர்தல் அதிகாரிகளை திமுக மிரட்டுகிறது.திமுக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை.நெல் ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ