| ADDED : நவ 13, 2024 01:09 PM
சென்னை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் டாக்டர் பாலாஜி, விக்னேஷ் என்பரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் டாக்டர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், போலீசாரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளின் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி டாக்டர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை. கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், போலீசாரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.