ஓசூர் : ''தமிழகத்தில், எட்டுவழிச்சாலை திட்டத்தை தடுத்த தி.மு.க., தற்போது அச்சாலை வேண்டுமென கேட்கிறது,'' என்று, தொழில்முனைவோர் மத்தியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார். 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார சுற்றுப்பயணம் மேற் கொண்டு வரும் பழனிசாமி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில், ஓசூரில் தொழில்முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுடைய கருத்துகளை கேட்டார். பின், கோரிக்கை மனுக்களையும் பெற்றார். மீண்டும் ஆட்சி தொழில்முனைவோர் மத்தியில் அவர் பேசியதாவது: ஓசூரில் தொழில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என கேட்டு, பலரும் மனு கொடுத்து உள்ளீர்கள். இதற்காக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 47 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின், அதை கிடப்பில் போட்டு விட்டனர். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தொழில் வர்த்தக மையம் அமைக்கப்படும். தமிழகத்தின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, ஓசூர் பெரிய அளவில் தொழில் நகரமாக வளர்ந்துள்ளது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை, அ.தி.மு.க., அரசு ஏற்படுத்தும். ஓசூரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதைக் குறைக்க, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதையும் செய்வோம். சாலைக்கு நிலம் எடுப்பது சாதாரண விஷயமல்ல. எட்டுவழிச் சாலை திட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். நாட்டிலேயே, இரண்டாவது பசுமைவழிச் சாலையாக, 10,000 கோடி ரூபாய் மதிப்பில், அத்திட்டத்தை கொண்டு வர முயன்றோம். ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. சாலைக்காக நிலம் கையகப்படுத்த விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகையை கொடுப்பதாக அறிவித்தோம். 94 சதவீத விவசாயிகள், அதை ஏற்றுக் கொண்டனர். காஞ்சிபுரத்தில், 20 லட்ச ரூபாய் நிலத்துக்கு, 1 கோடி ரூபாய் வரை கொடுப்பதாக அறிவித்தோம். தென்னை மரத்துக்கு, 30,000 ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை நிறைவேற்றும் நேரத்தில் பல பிரச்னைகள் வந்தன. பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்ததால், அத்திட்டம் கைவிடப்பட்டது. பலன் பெறும் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., இப்போது, அந்த சாலை வேண்டும் என கேட்கிறது. பெருந்தொழில்கள் அதிகமானால் தான், சிறு, குறு நிறுவனங்கள் பலன் பெறும். அதனால், பெரு நிறுவனங்களை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். தற்போது தொழில், பெரிய சரிவில் இருப்பதாக தெரிவிக்கிறீர்கள். இன்னும் எட்டு மாதங்கள் மட்டும் பொறுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.