திருச்சி: ''தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார். குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 'அட்டாக்' பாண்டியைப் பார்க்க, மத்திய ரசாயானத் துறை அமைச்சருமான அழகிரி, நேற்று காலை 10.30 மணிக்கு, திருச்சி மத்திய சிறைக்கு வந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் நெப்போலியன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் ஆகியோர் வந்தனர்.அழகிரி, நெப்போலியன், மூர்த்தி ஆகியோர், சிறைக்குள் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய சிறைத் துறையினர், 'மத்திய அமைச்சர்களுக்கு மட்டுமே அனுமதி' என்று கூறி, மூர்த்தியை உள்ளே விட மறுத்தனர்.மூர்த்தி தவிர, மற்ற இருவரும் உள்ளே சென்று, 'அட்டாக்' பாண்டியை சந்தித்துப் பேசினர்.சிறையிலிருந்து வெளியே வந்த அழகிரியிடம், முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டு, கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஷயம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின், மத்திய அமைச்சர் அழகிரி, நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து கூறியதாவது: தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவதை, அ.தி.மு.க., அரசின், 100 நாள் சாதனையில் சேர்த்துக் கொள்ளுங்கள். தி.மு.க.,வினரை பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்கின்றனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இதே நடவடிக்கைகள் தொடரும். நான் அந்த 'அம்மா'வை கூறவில்லை. பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அழகிரி கூறினார்.'கார்ப்பரேஷன் லாரியில் நாய் பிடிப்பது போல்...' : 'அட்டாக்' பாண்டியை பார்த்து விட்டு வந்த அமைச்சர் அழகிரியிடம், முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டு, கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதை, முன்னாள் எம்.எம்.ஏ., சேகரன் தெரிவித்தார். அதற்கு அழகிரியோ, 'கார்ப்பரேஷன் லாரியில் நாய் பிடிப்பது போல் பிடித்து வருகின்றனர். கடலூர் சிறையில், மதுரை பகுதி செயலர் ஒச்சபாலு தனியாக இருக்கிறார். அவருக்குத் துணையாக இருக்கும்' என்று தெரிவித்தார்.