உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடன்கார மாநிலமாக்கியதுதான் தி.மு.க.,வின் சாதனை: பழனிசாமி

கடன்கார மாநிலமாக்கியதுதான் தி.மு.க.,வின் சாதனை: பழனிசாமி

சென்னை: 'தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கியதுதான், தி.மு.க., அரசின் சாதனை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையை குறைக்கவும் ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடன்வாங்கும் யோசனையை தான் அளித்ததோ என்ற சந்தேகம் எழுகிறது. கடந்த ஐந்து மாதங்களில், கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய, தி.மு.க., அரசு மேலும் கடன் வாங்கி, தமிழகத்தை 'கடன்கார மாநிலம்' என்ற படுகுழியில் தள்ளியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, 37,082 கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. நடப்பாண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை இலக்கு, 41,635 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், வருவாய் பற்றாக்குறை 25,686 கோடி ரூபாயை எட்டிவிட்டது. மீதமுள்ள ஏழு மாதங்களில், மொத்த வருவாய் பற்றாக்குறை 60,000 கோடி ரூபாயை தாண்டும் என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவிற்காக, 57,271 கோடி ரூபாய் செலவிடப்படும் என, இலக்கு நிர்ணயித்த நிலையில், இதுவரை வெறும் 9,899 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. கடன் வாங்கி, தமிழகத்தை திவாலாக்கும் கடைசி படியில் நிற்க வைத்தது தான், முதல்வர் ஸ்டாலினின் சாதனை. தமிழக அரசு வாங்கி இருக்கும் கடன் தொகை, அதை எப்படி செலவிட்டது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை