ஏழை மாணவர்களுக்கு இரு மொழி என்பதே தி.மு.க., கொள்கை: பா.ஜ.,
சென்னை : ''ஏழை மாணவர்கள் இரு மொழிகள் தான் கற்க வேண்டும் என்பது தி.மு.க.,வின் கொள்கை.'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு, பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி, மாநில கல்வி கொள்கை என்ற பெயரில், ஒரு குழுவை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த குழு பரிந்துரைகளில் முக்கியமான பல கொள்கைகள், தேசிய கல்வி கொள்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. மூன்று ஆண்டுகளாக துாங்கிவிட்டு, தற்போது, இந்த கல்வி கொள்கையை வெளியிடுவது வெற்று விளம்பரம். தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்று கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளிகளில் இரு மொழிகள் தான் கற்று கொடுப்போம் என்று கூறுகிறார் ஸ்டாலின். பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம்; ஏழை மாணவர்கள் இரு மொழிகள் தான் கற்க வேண்டும் என்பது தி.மு.க.,வின் கொள்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் அறிக்கை: மத்திய அரசின் முன்னெடுப்புகளை மேடைகளில் எதிர்ப்பதும், திரை மறைவில் அதற்கு, 'ஸ்டிக்கர்' ஒட்டி விளம்பரம் தேடுவதையுமே முழுநேர தொழிலாக செய்து வரும் தி.மு.க., அரசு, அதே வரிசையில் மாநில கல்வி கொள்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறது. மாணவர்களின் வருங்காலத்தை பற்றி சிந்திக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக தினமும் விளம்பரத்தை பற்றி மட்டுமே திட்டமிடும் தி.மு.க.,வுக்கு தக்க பாடத்தை, சட்டசபை தேர் தலில் மக்கள் வழங்குவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.