உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நடத்திய பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தோல்வி

தி.மு.க., நடத்திய பள்ளி புறக்கணிப்பு போராட்டம் தோல்வி

சென்னை:சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக்கோரி, தமிழகம் முழுவதும் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் பிசுபிசுத்தது. இந்தப் போராட்டத்துக்கு, பொதுமக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் வகையில் ஆதரவு எதுவும் இல்லை. சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.தி.மு.க., தலைவர் கருணாநிதி, சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, சமச்சீர் கல்விக்கு ஆதரவாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைமை கேட்டுக்கொண்டது.மாணவர்களை தூண்டுவதாக தி.மு.க.,வின் செயலுக்கு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகளின் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் கண்டனம் தெரிவித்தார். பள்ளிகள் சுமுகமாக இயங்க யாரும் இடையூறு செய்யக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 'போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேலும் அறிவித்திருந்தார்.போராட்டத்தை முறியடிக்க, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் தேவையான நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, எங்கும் அசம்பாவித செயல்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.தமிழகம் முழுவதும் நேற்று நடந்த போராட்டத்தில் குறைந்த அளவிலான தொண்டர்களேபங்கேற்றதால், போராட்டம் பிசுபிசுத்தது. பள்ளிகளை புறக்கணித்து சமச்சீர் கல்விக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்பு, தோல்வியில் முடிந்தது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பல இடங்களில் மாணவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். கடலூரில், பள்ளிக்கு சென்ற மாணவர்களை தடுத்த தி.மு.க.,வினர் 13 பேரும், வல்லத்துறை மற்றும் கிள்ளையில் 30 பேரும், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர், அரசு பெரியார் கல்லூரியில் மாணவர்களை போராட்டத்திற்கு அழைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் நேற்று நடந்த இந்த போராட்டத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் மட்டும் 240 பேர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி முன் திரண்ட போராட்டக்காரர்கள், மாணவர்களை வகுப்பறைகளிலிருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர்.இதையடுத்து, போலீ சார்அவர்களையும் கைது செய்தனர். போராட்டம் குறித்து, சென்னை தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் கூறும்போது,'' இந்த ஒரு நாள் புறக்கணிப்பால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. மாணவர்களின் படிப்பில் அரசியலை நுழைக்கக் கூடாது'' என்றார். மொத்தத்தில் தி.மு.க., தரப்பில் நடத்தப்பட்ட போராட்டம் பிசுபிசுத்து, தோல்வியடைந்தது. சமச்சீர் கல்வி குறித்து இருவேறு கருத்துக்கள் பொதுமக்கள் மத்தியில் இருந்தாலும், பள்ளிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை