வயதானால் வேடிக்கை பார்க்கணுமா? உடற்பயிற்சி செய்து அசத்தும் மூதாட்டி
பாலக்காடு : பாலக்காடு அருகே, உடற்பயிற்சி செய்யும் மூதாட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலவஞ்சேரி கிடங்கறை பகுதியை சேர்ந்த ராமன்குட்டியின் மனைவி தங்கா, 74. இவர், தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளியாக உள்ளார்.இந்நிலையில், இவர் வீட்டின் அருகே மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இவரை பார்த்து, வயதானோர் பலரும் உடற்பயிற்சி செய்ய துவங்கியுள்ளனர். இதுகுறித்து, தங்கா கூறுகையில், ''நான்கு மாதங்களுக்கு முன், மாவட்ட ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட, திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை வியப்புடன் பார்த்தேன்.இதில் உள்ள கருவிகளில் எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து, முதலில் எனக்கு தெரியவில்லை. பலரும் உடற்பயிற்சி செய்வதை பார்த்து, நானும் கற்றுக்கொண்டேன்.தினமும், மாலை, 5:30 மணிக்கு உடற்பயிற்சி செய்வதற்காக வருவேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இதனால், புத்துணர்வு கிடைக்கிறது.வயதாகி விட்டதாக நினைத்து எதையும் விட்டு விலகி இருக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.