சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: தேர்தல் கமிஷன், தற்போது வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 90 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு கள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை போலி ஓட்டுகள். எந்த போலி ஓட்டுகளை வைத்து, தி.மு.க., ஆட்சியை பிடிக்க நினைத்ததோ, அந்த கனவு தற்போது தகர்ந்து விட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டிருந்தால், பதற்றப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைக்க, தேர்தல் கமிஷனின் படிவம் 6; இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8ஐ நிரப்பி, தங்கள் பெயரை இணைக்கலாம். இதற்கு நம் பூத் ஏஜன்டுகள் உதவி செய்வர். முதல்வரும், தி.மு.க.,வினரும், பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் ஓட்டு பறிபோனதாக சித்தரிப்பர். அவர்களின் சதி வலையில், யாரும் விழ வேண்டாம். அ.தி.மு.க., உள்ளவரை, ஒரு உண்மையான ஓட்டு கூட நீக்கப்படாது. இந்த எஸ்.ஐ.ஆர்., திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை, தமிழகத்தின் உண்மையான வாக்காளர்கள் மட்டும் இருக்கும் வகையில், 2026 சட்டசபை தேர்தலில், உண்மையான மக்களாட்சிக்கு அடித்தளமிடும் பட்டியலாக அமைத்திட, அ.தி.மு.க.,வினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.