உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பல்பொருள் அங்காடிகளில் விரைவில் டோர் டெலிவரி  வசதி

அரசு பல்பொருள் அங்காடிகளில் விரைவில் டோர் டெலிவரி  வசதி

சென்னை:தமிழக அரசின், 'அமுதம்' மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில், 'டோர் டெலிவரி' எனப்படும், வீட்டிற்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்யும் வசதி விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்காக, கணினி மென்பொருள், மொபைல் போன் செயலி உருவாக்கும் பணி நடக்கிறது. தமிழக அரசின் உணவு துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம், 'அமுதம்' என்ற பெயரில் பல்பொருள் அங்காடிகளை நடத்துகிறது. சென்னையில், 17, கடலுாரில் இரண்டு அமுதம் அங்காடிகளும், மாநிலம் முழுதும், 'அம்மா அமுதம்' பெயரில், 61 சிறிய அங்காடிகளும் உள்ளன. இதேபோல், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள், 'காமதேனு' உள்ளிட்ட பெயர்களில், 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட அங்காடிகளில், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. தனியார் அங்காடிகளில் குளிர்சாதன வசதி, அதிக பொருட்கள், தள்ளுபடி, டோர் டெலிவரி உள்ளிட்ட பல சேவைகளை வழங்கப்படுகின்றன. இதனால், அந்த அங்காடிகளில் அதிகம் பேர் பொருட்களை வாங்குகின்றனர்.எனவே, அமுதம் அங்காடிகளையும் புதுப்பொலிவுக்கு மாற்ற, அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக, சென்னை அண்ணா நகர், கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடிகள் புதுப்பொலிவு பெற்றன. இதனால், அவற்றில் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அமுதம் அங்காடிகளில் இருந்து வீட்டிற்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்யும், 'டோர் டெலிவரி' வசதி துவக்கப்பட உள்ளது. இதற்காக, கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து, மொபைல் போன் செயலி உருவாக்கும் பணி நடக்கிறது. இதேபோல், கூட்டுறவு அங்காடிகளிலும் டோர் டெலிவரி வசதியை துவக்குவதற்கான பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனியார் அங்காடிகளுக்கு இணையாக, அரசு அங்காடிகள் மாற்றப்பட்டு வருகின்றன; டோர் டெலிவரி வசதி மட்டும் இல்லாமல் உள்ளது; இந்த வசதியும், அடுத்த மாதத்திற்குள் துவக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை