இளம் கால்நடை டாக்டர்கள் சிறப்பாக பணியாற்ற மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுரை
சென்னை : ''அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, இளம் கால்நடை டாக்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்,'' என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.சென்னை, வேப்பேரியில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, நாய் இன மருத்துவ முன்னேற்றத்திற்கான இந்திய சங்கம் ஆகியவற்றின் சார்பில், 'நாய்களுக்கான அவசர மற்றும் தீவிர சிகிச்சை முறைகள்' எனும் தேசிய அளவிலான, மூன்று நாள் கருத்தரங்கு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.தமிழக மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், கருத்தரங்கு மலரை வெளியிட்டு பேசியதாவது:மனிதன், விலங்குகள் மற்றும் சூழ்நிலையை ஒன்றடக்கிய சுகாதாரத்தில், கால்நடை டாக்டர்களின் பங்கு முக்கியமானது. அவசரநிலை
செல்லப் பிராணிகள், குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுகின்றன. நாய்களுக்கு நேரிடும் விபத்து மற்றும் நோய் தொற்று போன்ற அவசர நிலைகளில், ஸ்கேன், டயாலிசிஸ் போன்ற நவீன மருத்துவ சிகிச்சை முக்கியமானது. அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, இளம் கால்நடை டாக்டர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு, நாய்களின் உடல் நிலை குறித்து தெளிவாக கூற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நாய் இன மருத்துவ மேம்பாட்டிற்கான, இந்திய சங்கத்தின் தலைவர் பிரதாபன் பேசுகையில், ''வருங்காலத்தில், செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்போரில், பெண் கால்நடை டாக்டர்கள் அதிக அளவில் இருப்பர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், சர்வதேச பயிற்சி மையம் அமைக்க வேண்டும்,'' என்றார். வாழ்த்துரை
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, சிகிச்சையியல் இயக்குநர் அனில்குமார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லுாரி முதல்வர் சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உள்ளிருப்பு கால்நடை மருத்துவ பிரிவின் உதவி பேராசிரியர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்.