சென்னை : தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,820 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. 'குடி'மகன்கள் காலி பாட்டில்களை சாலைகளில் வீசிவிட்டு செல்கின்றனர். குறிப்பாக, சுற்றுலா தலங்கள், நீர் நிலைகளில் அவ்வாறு செய்வதால், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன; சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி, மது கடைகளிலேயே காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்து உள்ளது. அத்திட்டத்தின் கீழ், மது கடைகளில் விற்கப்படும் போது, மது பாட்டிலின் எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் சேர்த்து வசூலிக்கப்படும். இதற்காக, பாட்டிலில் தனியே, 'ஸ்டிக்கர்' ஒட்டி வழங்கப்படும். 'குடி'மகன்கள் காலி பாட்டிலை கடையில் வழங்கினால், 10 ரூபாய் அவர்களிடம் திரும்ப வழங்கப்படும். இத்திட்டம், நீலகிரி, பெரம்பலுார், கோவை மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது.நேற்று முன்தினம் முதல் திருவாரூர், நாகை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.