காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவ., 30க்குள் முழுமையாக அமல்படுத்த கெடு
சென்னை: 'காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஆங்காங்கே பிளாஸ்டிக் பாட்டில்களை, மது பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். இதனால், வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. உத்தரவு இதை தடுக்கும் விதமாக, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தந்தால், அந்த, 10 ரூபாயை கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, சிறப்பு அமர்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ''மாநிலம் முழுதும் உள்ள 4,500 டாஸ்மாக் கடைகளில், 1,479 கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ''மீதமுள்ள கடைகளில் நவம்பர் இறுதிக்குள் ஒரே கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்,'' என்றார். அவகாசம் அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'காலி மதுபாட்டில்களை விற்பனை செய்ததன் வாயிலாக, 26 கோடி, 93 லட்சத்து 72,223 ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது' என்று கூறப்பட்டு உள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், 'மாநிலம் முழுதும் நாளொன்றுக்கு, 90 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படும் நிலையில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நவ., 30ம் தேதிக்குள் மாநிலம் முழுதும் அமல்படுத்த வேண்டும். அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது' என்றனர். மேலும் நீர்நிலைகளில், பொது இடங்களில், வயல் வெளிகளில் ஒரு காலி பாட்டில் கூட காண முடியாத நிலையை உருவாக்க, திறமையான நடவடிக்கைகளை எடுக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை, டிச., 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.