''சுய லாபத்திற்காக அ.தி.மு.க.,வை இ.பி.எஸ்., அழித்துக் கொண்டிருக்கிறார்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., குறித்து விமர்சிக்க, ''ஏதோ தான் வந்த பிறகுதான், பா.ஜ., வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை அண்ணாமலை உருவாக்கியுள்ளார். அவர், தினமும் பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர, கட்சியை வளர்த்தபாடில்லை,'' என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இ.பி.எஸ்.,
வாயிலேயே வடை சுடும் மலை
அ.தி.மு.க., விக்கிர வாண்டி சட்டசபை இடைத்தேர்தலை புறக்கணித்ததற்கான காரணத்தை, ஏற்கனவே அறிவித்து விட்டோம். இருப்பினும் வேண்டும் என்றே, அ.தி.மு.க.,வை அண்ணாமலை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் மெத்தப் படித்தவர்; மிகப் பெரிய அரசியல் ஞானி; அவரது கணிப்பு அப்படி இருக்கிறது. விக்கிரவாண்டியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்காது. அதெல்லாம் அண்ணா மலைக்கும் நன்கு தெரியும். இருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்டு, விக்கிரவாண்டி சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடாமல் புறக்கணித்தது குறித்து பரபரப்புக்காக பேசியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது.அதுமட்டுமல்ல, ஏதோ தான் தமிழக பா.ஜ.,வுக்கு தலைவராக வந்த பின் தான், தமிழக பா.ஜ., வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர், தினமும் பேட்டி கொடுத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் பா.ஜ., மாநில தலைவராக வந்த பின், என்ன புதிய திட்டத்தை மத்திய அரசு வாயிலாக தமிழகத்துக்கு கொண்டு வந்தார்? வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். மற்ற கட்சிகளையும்; தலைவர்களையும் அவதுாறாக பேசுவதைத்தான், வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட மாநில தலைவர்கள் பா.ஜ.,வில் இருப்பதால்தான், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய, அக்கட்சி, கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கை துரோகி இ.பி.எஸ்.,
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டது என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்' என பழனிசாமி கூறியுள்ளார். அப்படியென்றால், 2026 சட்டசபை தேர்தல் வரை இதே நிலை நீடித்தால், அதே காரணத்தைச் சொல்லி, 2026 சட்டசபை தேர்தலையும் அ.தி.மு.க., புறக்கணிக்கும் என இ.பி.எஸ்., அறிவிப்பாரா?ஈரோடு கிழக்குத் தொகுதியில் பா.ஜ., போட்டியிடுவதில்லை என முடிவெடுத்து அறிவித்து இருந்தது. அந்த சமயத்தில் என்னை தொடர்பு கொண்டு பேசினார் இ.பி.எஸ்.,. அப்போது, 'என் தாயின் சொந்த ஊர்; இந்த ஊரில் நான் பிறந்தேன் என்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடுகிறது. பன்னீர்செல்வமும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தி போட்டியிட்டால், அது அ.தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், அவர் தன்னுடைய சார்பில் வேட்பாளரை களம் இறக்காமல், தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் நல்லது என்று கூறினார். அதை ஏற்று பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். ஆனால், அந்த தேர்தலில் என்ன நடந்தது? 66,233 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்.அதிகார வெறிக்காக, தன்னுடைய சுய லாபத்திற்காக இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வை அழித்து வருகிறார். நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால், அது இ.பி.எஸ்.,க்கு தான் பொருந்தும். இ.பி.எஸ்., கண்ணாடி எடுத்து அவரது முகத்தை பார்த்தால், கண்ணாடி அவருக்கு அறிவுரை கூறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.-நமது நிருபர்-