ரஜினி, அஜித், நயன்தாரா வந்தாலும் கூட்டம் கூடும்: சீமான் விமர்சனம்
கோவை: “நடிகர் விஜய் வருவதால், வரும் சட்டசபை தேர்தலில் எந்த மாற்றமும் இருக்காது,” என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கோவையில் அவர் அளித்த பேட்டி: நடிகர்கள் என்றாலே, அதிக அளவில் கூட்டம் வருவது வழக்கம். அதேபோல்தான், திருச்சியில் த.வெ.க., விஜய்க்கும் கூட்டம் திரண்டுள்ளது. நடிகர்கள் அஜித், ரஜினி, நடிகை நயன்தாரா வந்தால், இதைவிட மிக அதிக கூட்டம் வரும். கூட்டத்தை பார்க்காதீர்கள்; அவர்கள் முன்வைக்கும் கொள்கையை பாருங்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக, மலைகளின் மாநாடு வரும் 27ல் தர்மபுரியில் நடக்கிறது. மலையை வெட்டுகின்றனர்; மணலை அள்ளுகின்றனர்; கடலில் குப்பையை போடுகின்றனர்; இந்த பூமியும் அழிக்கப்படுகிறது. அதைக் கேட்க யாரும் இல்லை. தற்போதைய ஆட்சிகளில் ஏற்படும் அவலங்களை, தட்டிக்கேட்க ஆள் இல்லை. நான், தேர்தலில் கூட்டணி வைக்காமல் தோற்று விட்டேன். எனக்கு ஏதாவது நஷ்டம் இருக்கிறதா? ஆனால், என்னை விட அதிகாரம் படைத்த கட்சி இல்லை. நான் போராடியதால் தான், பரந்துார் விமான நிலையம், எட்டு வழிச்சாலை, டங்ஸ்டன் தொழிற்சாலை, கடலில் பேனா நினைவுச்சின்னம் போன்ற திட்டங்கள் அப்படியே நிற்கின்றன. மக்கள் ஓட்டு போடும்போது, நாங்கள் அதிகாரத்துக்கு வருவோம். அதிகாரத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் தீமை செய்கின்றனர். எனக்கு ஓட்டு போட்டால் நன்மை செய்வேன். விஜய் வருவதால், வரும் சட்டசபை தேர்தலில் எந்த மாற்றமும் இருக்காது. என் கையில் தான், தேர்தலுக்கான ஆட்டம் இருக்கும். இப்போது, எந்த தலைவரும் தங்கள் மனதில் இருந்து மக்கள் பிரச்னையை பேசுவதில்லை. எல்லோருமே எழுதிக் கொடுத்ததை பார்த்து படிப்பவர்கள்தான். நன்றாக படித்து விட்டுச் சென்று, ஒரு தேர்வை எழுதுபவன் சிறந்த மாணவனா? பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு தேர்வுக்கு செல்பவன் சிறந்த மாணவனா? அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பெரிய தாள் வைத்து பேசுகிறார்; முதல்வர் ஸ்டாலின் சின்ன தாள் வைத்து பேசுகிறார், அவ்வளவுதான். விஜய், தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்பதை அடுத்த ஆண்டு மே மாதத்தில்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.