உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சி உருவாக்கம்

16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சி உருவாக்கம்

சென்னை:தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன.தமிழகத்தின் மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேக நகரமயமாக்கலைக் கருதி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.

கட்டமைப்பு மேம்பாடு

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி, பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் அதிகரித்துள்ளன. அங்கு குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக உள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன், கிராமப் பகுதிகள் இணைக்கப்படும்போது, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றன.இந்நிலையில், தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இணைப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பான உயர்நிலைக் குழு, மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம் மற்றும் உருவாக்கம் செய்வதற்கான உத்தேச பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.

மறு நிர்ணயம்

திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன், 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படுகின்றன. அதேபோல், பேரூராட்சிகளுடன் இணைத்தும், தனித்தும் என, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. கிராம ஊராட்சிகளை இணைத்தும் மற்றும் தனியாகவும் என, ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட, 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன. அதேபோல், திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து, 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.இந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் விரிவாக்கம் மற்றும் உருவாக்கம் தொடர்பான அரசாணையை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இதற்கான வார்டு எண்ணிக்கை மறு நிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிதாக 13 நகராட்சிகள்

சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, கவுந்தப்பாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, அரூர், சூலுார், மோகனுார், நாரவாரிக்குப்பம் மற்றும் வேப்பம்பட்டு ஆகியவை புதிய நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

புதிதாக 25 பேரூராட்சிகள்

ஈரோடு மாவட்டத்தில், முகாசிபிடாரியூர், கோவை மாவட்டத்தில், கணியூர், அரசூர், பேரூர் செட்டிப்பாளையம், பட்டணம்; திருவள்ளுரில், அத்திப்பட்டு, பாடியநல்லுார், கடம்பத்துார்; புதுக்கோட்டையில், விராலிமலை, திருமயம்; சிவகங்கையில் காளையார்கோவில்; சேலத்தில், தலைவாசல், ஏற்காடு. மணிவிழுந்தான்; கிருஷ்ணகிரியில், பாகலுார், ராயக்கோட்டை, சூளகிரி; தர்மபுரியில், கூத்தப்பாடி; ராமநாதபுரத்தில் தேவிப்பட்டினம், ஏர்வாடி; துாத்துக்குடியில் புதியம்புத்துார்; திருச்சியில் இருங்களூர்; திருப்பூரில், நத்தக்காடையூர்; மயிலாடுதுறையில், கொள்ளிடம்; நாமக்கல்லில் தோக்கவாடி ஆகிய உள்ளாட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Madhan Kumar
ஜன 03, 2025 14:39

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரம் தற்பொழுது 30000 மக்கள் தொகை உள்ள நகரம். மேலும் ரயில் நிலையம், என் எச் 844 தேசிய நெடுஞ்சாலை செல்லும் முக்கிய நகரம் ஆகும். தமிழ்நாட்டின் ராயகோட்டை தக்காளி சந்தைக்கு அடுத்த படியாக பெரிய சந்தை பாலக்கோடு தான். ஆனால் பாலக்கோடு பேரூராட்சியே நகராட்சியாக தரம் உயர்தாத்தாது பாலக்கோடு நகரம் மற்றும் தாலுகா மக்களின் ஒரே வருத்தம். மேலும் அ. மல்லாபுரம், தொப்பூர், மெனசி, ஏரியூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை, போச்சம்பள்ளி போன்றவற்றை பேரூராட்சி அந்தஸ்து வழங்காததும் மக்களிடம் ஏமாற்றம் ஆக்கியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை