டிரக்கிங் கட்டணங்களை குறைக்க எதிர்பார்ப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்,: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மலையேற்ற திட்டத்தில் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ள இயற்கை ஆர்வலர்கள் கட்டணத்தை குறைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.கேரளா, கர்நாடகா போல் தமிழகத்திலும் மலையேற்றம் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள, வன ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது தமிழகத்திலும் 14 மாவட்டங்களில் 40 வழித்தடங்களை அடிப்படையாக வைத்து தமிழக அரசு மலைேயற்ற திட்டத்தை உருவாக்கி சில நாட்களுக்கு முன் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.இதில் தலா 14 வழித்தடங்கள் எளிதான பகுதி மற்றும் மிதமான பகுதி என்றும், 12 வழித்தடங்கள் கடினமான பகுதி என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களுக்கு மலையேற்றம் செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.அந்தந்த வழித்தட பகுதிகளைச் சார்ந்த உள்ளூர் மக்கள், பழங்குடியினர்கள் வழிகாட்டிகளாக செயல்பட்டு மலைேயற்றம் செல்பவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வார்கள். இதற்காக அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் இத்திட்டத்தில் பங்கேற்று மலையற்றம் செல்வதற்கு ஒவ்வொரு வழித்தடங்களை பொறுத்து குறைந்தபட்சம் ரூ. 700 முதல் ரூ. 5999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பில் இருந்து புதுப்பட்டி வரை 9 கி.மீ., செல்வதற்கு ரூ. 2299, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேற ரூ. 5099, தென்காசி மாவட்டம் தீர்த்த பாறை மழையற்ற வழிதடத்திற்கு ரூ. 799, கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து பண்டார வரை 8 கி.மீ.,க்கு ரூ. 4699 என ஒவ்வொரு வழித்தடத்திற்கும் மலையேற்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏராளமான இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் மலையேற்றத்தை விரும்புகின்றனர். ஆனால் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால் பொருளாதார வசதி உள்ளவர்கள் மட்டுமே மலையேற்றம் செல்ல முடியும். நடுத்தர மற்றும் ஏழை மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, இத்திட்டம் சிறப்பான வெற்றி பெறுவதற்கு கட்டணங்களை குறைப்பது அவசியமென இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.