UPDATED : ஜூலை 06, 2025 12:09 PM | ADDED : ஜூலை 06, 2025 10:45 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று (ஜூலை 06) தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.இதனால் எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. ஆலையில் இருந்த பட்டாசுகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெடித்து சிதறி வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரை அடையாளம் காண முடியவில்லை. மேலும் ராஜபாண்டி, காமேஸ், ராகேஷ், காளிமுத்து, ராஜசேகரன், கண்ணன் ஆகிய 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போர்மேன் கைது
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் போர்மேன் லோகநாதனை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமம் ரத்து
பட்டாசு வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.