உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்து பிரபல எழுத்தாளர் வழக்கு

கனவு இல்லம் ஒதுக்கீடு ரத்து பிரபல எழுத்தாளர் வழக்கு

மதுரை:'கனவு இல்லம்' திட்டத்தில் வீடு ஒதுக்கீடு ரத்து செய்ததை எதிர்த்து, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வடகரையை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:நான் எழுதிய, 'காலா பாணி' நாவலுக்கு, 2022ல் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கியது. இலக்கியத்திற்கான ஞானபீடம், சாகித்ய அகாடமி, தேசிய அல்லது மாநில அல்லது சர்வதேச விருது பெறும் தமிழ் எழுத்தாளர்களை கவுரவிக்க, 'கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என, தமிழக அரசு 2022ல் அறிவித்தது. சென்னை திருவான்மியூரில், 2023ல் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.'வீட்டு வசதி வாரியம் மூலம் சலுகை விலை அல்லது சந்தை விலை அல்லது இலவசமாக வீடு அல்லது நிலம் ஒதுக்கீடு பெற்றிருந்தால், கனவு இல்லம் திட்டத்தில் பயனடைய முடியாது' என விதிகளில் தமிழக அரசு, 2024 ஜன., 26ல் மாற்றம் செய்தது. வீட்டு வசதி வாரியம் மூலம் நெற்குன்றத்தில் 2017ல் வீடு வாங்கினேன். சந்தை மதிப்பு தொகையை செலுத்தினேன். சலுகை விலை அல்லது மானியம் மூலம் அதை வாங்கவில்லை.இதை காரணமாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவான்மியூரில் வீடு ஒதுக்கீடு செய்ததை தமிழக அரசு ரத்து செய்தது. விளக்கமளிக்க எனக்கு நோட்டீஸ் அளிக்கவில்லை. ரத்து செய்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலர், இயக்குனர், வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர், டிச., 12ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி