| ADDED : ஜூன் 04, 2025 03:07 PM
தருமபுரி: தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜாதோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன்,52, என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பித் தர மறுத்த நபர் மீது புகார் அளிக்க எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராமனின் உடலில் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். எஸ்.பி., அலுவலகத்தில் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.