உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மானியம் குறைவால் மாற்று பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

மானியம் குறைவால் மாற்று பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்

சென்னை:'மாற்று பயிர் சாகுபடி திட்டத்திற்கான மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு தண்ணீர் அதிகம் தேவை. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பை குறைக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும், அதிக நீர் தேவையுள்ள நெல் பயிருக்கு மாற்றாக சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களை ஊக்குவிக்க வேண்டியுள்ளது.

இலக்கு நிர்ணயம்

இதற்காக, மாற்று பயிர் சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நடப்பாண்டு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் ஏக்கரில், மாற்று பயிர் சாகுபடி திட்டத்தை செயல்படுத்தி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இதற்கான பயனாளிகள் தேர்வு, அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதைகள், திரவ உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன. பருப்பு வகை சாகுபடிக்கு, ஒரு ஏக்கருக்கு 2,512 ரூபாய்; எண்ணெய் வித்து சாகுபடிக்கு அறுவடையுடன் சேர்த்து, 2,696 ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு மானியமாக, 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவும் பணமாக இல்லாமல், இடுபொருட்களாக வழங்கப்படுகிறது.இதனால், மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகள் பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. எனவே, சாகுபடி செலவை முழுதும் மானியமாக வழங்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நோக்கம் நிறைவேறாது

வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடிக்கு அதிகளவில் செலவு ஆகாது. எனவே, குறைந்த நிதியில், அதிக பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. மானியத்தை பணமாக கொடுத்தால், செலவு செய்து விடுவர். அதனால், அரசின் நோக்கம் நிறைவேறாது. எனவே, இடுபொருட்களை மானியமாக தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை