உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 கிலோவாட் வரை ரூப் டாப் சோலார் சாத்தியக்கூறு அறிக்கை தேவையில்லை

3 கிலோவாட் வரை ரூப் டாப் சோலார் சாத்தியக்கூறு அறிக்கை தேவையில்லை

சென்னை:வீடு உள்ளிட்ட கட்டடங்களில், பல்வேறு திறனில், 'ரூப் டாப் சோலார்' எனப்படும், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதை அமைக்க சாத்தியம் இருக்கிறதா என்பதற்காக, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், 'பீசபிலிட்டி ரிப்போர்ட்' எனப்படும், சாத்தியக்கூறு அறிக்கை பெற வேண்டும். இதற்கு, மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்க, அலுவலகங்களில் தாமதம் செய்யப்படுவதாக தெரிகிறது. இதையடுத்து, 3 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, சாத்தியக்கூறு அறிக்கை பெற தேவையில்லை என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து, மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு:தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான சூரியசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்த, அனைத்து நடவடிக்கைகளையும் மின் வாரியம் எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தித்திறன், 7,372 மெகா வாட்டாக உள்ளது. அவற்றில், 526 மெகா வாட் கட்டடங்களின் மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள்.

எளிமை

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, சூரியசக்தி மின் உற்பத்தி ஊக்குவிக்கும் வகையில், விண்ணப்ப செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது, தாழ்வழுத்த மின் இணைப்பில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக செயலாக்கப்படுகின்றன.இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்த, 3 கிலோ வாட் வரையிலான சூரியசக்தி மின் நிலையம் அல்லது மின்திறன் இரண்டில் எது குறைவோ, அதற்கு, 'சாத்தியக்கூறு அறிக்கை' பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க விரும்புவோர், விண்ணப்பத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்து, இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை