சென்னை: ஏ.வி.எம்., பட தயாரிப்பு நிறுவன உரிமையாளரான, ஏ.வி.எம்.சரவணன், 86, வயது மூப்பு காரணமாக, நேற்று காலை காலமானார். அவரது உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, நடிகர்கள் ரஜினி, சிவகுமார், சூர்யா, விஷால் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1958 முதல், ஏ.வி.எம்., பட நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வந்த சரவணன், மாமியார் மெச்சிய மருமகள் படத்தில் தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டுமின்றி, பல மொழிகளில் படங்களை தயாரித்துள்ளார். 'சம்சாரம் அது மின்சாரம், முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, பாயும் புலி, மிஸ்டர் பாரத், எஜமான், துாங்காதே தம்பி துாங்காதே, முந்தானை முடிச்சு, மின்சார கனவு, சிவாஜி, திருப்பதி, ஜெமினி, வேட்டைக்காரன், அயன்' போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். இவருக்கு, மனைவி முத்துலட்சுமி, மகன் குகன், மகள் உஷா ஆகியோர் உள்ளனர். 'திரைத் துறையில் ஒழுக்கம், நேர்மை மற்றும் தொழில் பக்திக்கு உதாரணமாக திகழ்ந்தவர் சரவணன்' என, திரை உலகத்தினர் புகழஞ்சலி செலுத்தினர்.