வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த மாதிரி சான்றுகள், அனுமதிகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பது ஊர் அறிந்த ரகசியம். தனது சகாக்களின் வருமானம் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில், இந்த முன்னாள் தீயணைப்பு வீரர், இந்த அரசாணையை எதிர்க்கிறார்.
சென்னை : தமிழகத்தில், தனியார் வாயிலாக கட்டடங்களுக்கு தீயணைப்பு தடையில்லா சான்று வழங்க வகை செய்யும் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.சென்னை, எழும்பூரை சேர்ந்த ஓய்வுபெற்ற தீயணைப்பு துறை அதிகாரி எம்.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனு:அடுக்குமாடி கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனை கட்டங்கள் மற்றும் அரசு கட்டடங்களுக்கு ஒப்புதல் பெறும் முன், தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம். கட்டடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்த இரு குழுக்களின் அறிக்கையை ஏற்று, உள்துறை செயலர், கடந்த நவ., 21ல் அரசாணை வெளியிட்டுள்ளார்.அதில், கட்டடங்களுக்கான திட்ட அனுமதி, தீயணைப்பு துறை தடையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, தீயணைப்பு துறை வழங்கி வரும் தடையில்லா சான்றை, தனியார் வாயிலாக வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, சட்டவிரோதமானது. தீயணைப்பு துறை தான், கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, தடையில்லா சான்று வழங்க வேண்டும். தனியார் வாயிலாக வழங்கப்படும் தீயணைப்பு தடையில்லா சான்று, புதிய நடைமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு செல்லும். இப்புதிய நடைமுறை மிகவும் ஆபத்தானது; ஊழலுக்கும் வழிவகுக்கும். எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, அரசாணைக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு உள்துறை செயலர், தீயணைப்பு துறை டி.ஜி.பி., உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மாதிரி சான்றுகள், அனுமதிகள் எப்படி வழங்கப்படுகின்றன என்பது ஊர் அறிந்த ரகசியம். தனது சகாக்களின் வருமானம் பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்தில், இந்த முன்னாள் தீயணைப்பு வீரர், இந்த அரசாணையை எதிர்க்கிறார்.