உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடப்பாண்டு கட்டட இடிபாடு, தீ விபத்துகளில் சிக்கிய 2,132 பேரை மீட்ட தீயணைப்பு துறை

நடப்பாண்டு கட்டட இடிபாடு, தீ விபத்துகளில் சிக்கிய 2,132 பேரை மீட்ட தீயணைப்பு துறை

சென்னை:தமிழகத்தில் நடப்பாண்டில், தீ விபத்துகள் மற்றும் கட்டட இடிபாடு உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவங்களில் சிக்கிய, 2,132 பேரை, தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இது குறித்து, தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் உள்ளன. மாநிலம் முழுதும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து, இலவச அவசர உதவி எண்கள்: 100, 101, 112 போன்றவற்றின் வாயிலாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இந்த அழைப்புகள், சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படும், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்கப்படும். உடனடியாக, அழைப்பு வந்த மாவட்டங்களில் செயல்படும், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விபத்து நடந்த இடங்களுக்கு, தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படு கின்றனர். சம்பவ இடத்திற்கு, குறித்த நேரத்தில் தீயணைப்பு வாகனங்கள் சென்றதா, மீட்பு பணிகள் சரியாக நடக்கிறதா என்பது, ஜி.பி.எஸ்., கருவி மற்றும் நவீன கண்காணிப்பு கேமரா வாயிலாக, இயக்குநர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் செப்டம்பர் வரை, தீ விபத்துகள் தொடர்பாக, 19,426 அழைப்புகள் வந்துள்ளன. கட்டட இடிபாடு உட்பட மற்ற விபத்துகளில் சிக்கி இருப்போரை மீட்கக்கோரி, ஒரு லட்சத்து 7,510 அழைப்புகள் வந்துள்ளன. தீ விபத்துகள் தொடர்பான அழைப்புகளில், 74 மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன. மீட்பு பணிகள் தொடர்பான அழைப்புகளில், 2,058 பேர் காப்பாற்றப் பட்டு உள்ளனர். தீ விபத்துகளில், 1.99 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாகின. அதேநேரத்தில், 40.21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை