உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

சென்னை: வண்டலூர் பூங்காவில், தப்பித்துச் சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவில் இந்த பாம்பின் நடமாட்டத்தை கண்டறிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.இது குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டலூர் உயிரியல் பூங்கா பாம்புக்கூடத்தில் கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகிய நான்கு வகையான விஷப்பாம்புகளும், சாரை, தண்ணீர், நீக்கத்தான், பச்சை, மண்ணுளி, கொம்பேறி மூக்கன், இருவகை மலைப் பாம்பு என எட்டு வகையான விஷமற்ற பாம்புகளும் பராமரிக்கப்படுகின்றன. பாம்புகளின் உடல் வெப்பம், சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்திருக்கும். அதிக வெப்பநிலையோ, மிகக் குறைந்த வெப்பநிலையோ பாம்புகளுக்கு உகந்ததல்ல. இங்கு பாம்புக்கூடம் சிறந்த முறையில் கட்டப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளை போன்று வெப்பநிலை கட்டுப்பாட்டு சாதனங்கள் இல்லை. இதனால், பாம்புகளுக்கு உகந்த வெப்பநிலை அளிக்க முடியாத நிலை இருந்தது. இதனால், இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டது. இதை கருத்தில்கொண்டு, இயற்கை பொருட்களைக் கொண்டு பாம்புக்கூடம் மேம்படுத்தப்பட்டது. இதனால், பாம்புகளின் இறப்பு தடுக்கப்பட்டதோடு, இனப்பெருக்கமும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், இரண்டு வகையான மலைப்பாம்புகள் முட்டையிட்டு அடைகாத்தன.ஜூலை மாதம், இந்த முட்டைகளில் இருந்து 32 குஞ்சுகள் பொறித்தன. இதனால், மலைப்பாம்புகளில் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கடந்த இரண்டு மாதத்தில் இந்த பாம்புக் குஞ்சுகள் நல்ல வளர்ச்சி அடைந்து காணப்பட்டன. இந்நிலையில், கடந்த 16ம் தேதி, பாம்புக்கூடத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, ஒரு மலைப்பாம்பு தப்பித்து சென்று, அருகேயுள்ள காட்டுப் பகுதியில் புகுந்தது. ஊழியர்கள் உடனடியாக காட்டுப் பகுதிக்கு சென்று, குப்பைக் கூளங்களை அகற்றி தேடினர். பாம்பு கிடைக்கவில்லை. தப்பித்துச் சென்ற பாம்பு, ஒரு நாளைக்கு முன்பே உணவு உட்கொண்ட காரணத்தால், ஏதாவது மரப்பொந்துகளில் புகுந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருத்தப்படுகிறது. இவை, இரவில் மட்டுமே நடமாடும் என்பதால், இந்த சிறிய பாம்பால் மனிதர்களுக்கோ, மற்ற விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது. இரைத்தேடியும், இனத்தை தேடியும் தப்பித்து சென்ற மலைப்பாம்பு, மீண்டும் கூண்டிற்கு வரக்கூடும் என்பதால், பாம்புக்கூடத்தை இரவில் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்கள் மரப்பொந்துகளிலும், வளைகளிலும் பாம்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை