மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ., மீண்டும் கூட்டணி உறுதி
12-Apr-2025
சென்னை:''முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், தமிழக அரசு துறைகளில், 39,000 கோடி ரூபாய் ஊழல் நடந்தது எனக் கூறிய, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது வழக்கு தொடரட்டும்,'' என, முன்னாள் மத்திய அமைச்சரான, அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., 1998 ம் ஆண்டு, தி.மு.க.,வை வீழ்த்த, பா.ஜ., உடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றோம். அதன்பின் காவிரி பிரச்னைக்காக, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதுடன், கூட்டணியை முறித்துக் கொண்டோம். பா.ஜ., உடன் தி.மு.க., கூட்டணி அமைத்தது. ஐந்து ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தனர். அது பொருந்தும் கூட்டணியா, பொருந்தாத கூட்டணியா என, முதல்வர் கூற வேண்டும்.சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பது, தி.மு.க.,வின் கொள்கை. ஆனால், அ.தி.மு.க., தமிழக நலனுக்காக, கூட்டணி அமைக்கும். தற்போது பழனிசாமி சரியான முடிவு எடுத்துள்ளார். தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி நடக்கிறது. அமித்ஷா 30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஊழல் குறித்து அமித்ஷா கூறியதற்கு, தி.மு.க., இதுவரை வாய் திறக்கவில்லை.முதல்வர் ஸ்டாலின் தைரியம் இருந்தால், 39,000 கோடி ரூபாய் ஊழல் எனக் கூறிய அமித்ஷா மீது, வழக்கு தொடரட்டும். பழனிசாமி சரியான கூட்டணி அமைத்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு இடையூறு வந்தால், அ.தி.மு.க., அவர்கள் பக்கம் இருக்கும். வக்ப் சட்ட மசோதாவை எதிர்த்து, அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளோம். முஸ்லிம் மக்களுடன் சுமுகமான உறவு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிதான் முஸ்லிம் மக்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கியது. பழனிசாமிக்கு நாட்டு மக்களின் உணர்வு தெரியும். அதன் அடிப்படையில், கூட்டணி அமைத்துள்ளார். கடந்த செயற்குழு, பொதுக்குழுவில், அவருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அடிப்படையில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ளார்.தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. இனியும் கூட்டணி ஆட்சி வராது. வரும் 2026 தேர்தலில் பழனிசாமி வென்று, தனியாக ஆட்சி அமைப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.
12-Apr-2025