மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2157 கோடியில் நான்கு வழிச்சாலை
சென்னை:விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே, 46 கி.மீ., துாரத்திற்கு, 2157 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலை அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. மரக்காணம் - புதுச்சேரி இடையேயான நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப் பட உள்ளது. இதனால், மரக்காணம் - புதுச்சேரி இடையே பயண நேரம், 40 சதவீதம் அதாவது, 60 நிமிடங்களில் இருந்து, 35 நிமிடங்களாக குறையும்; சராசரி வாகன வேகம் இரட்டிப்பாகும். இத்திட்டம் இரு மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகளுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுதும் பொருளாதார, சமூக மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான தடையற்ற இணைப்பை வழங்கும். பிரதமருக்கு நன்றி தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளிட்டுள்ள அறிக்கை: மரக்காணம் - புதுச்சேரி இடையே, 2157 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சமூக பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில், எட்டு லட்சம் நேரடி வேலைவாய்ப்பையும், 10 லட்சம் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்க வல்லதே இந்த திட்டம். இத்தைகய உன்னத திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.