உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிற்சாலை அமைக்க தனியார் முன்வந்தால் ஆலோசனை இலவசம்: அமைச்சர் அறிவிப்பு

தொழிற்சாலை அமைக்க தனியார் முன்வந்தால் ஆலோசனை இலவசம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை:''பழங்கள், பூக்கள், இதர வேளாண் விளைபொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க முன்வருவோருக்கு, மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உதவி வழங்கப்படும்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:தி.மு.க., - மணிகண்ணன்: உளுந்துார்பேட்டை தொகுதி ஆசனுார் பகுதியில், குறு, சிறு தொழில்களை விரிவுபடுத்த அரசு முன்வருமா?அமைச்சர் அன்பரசன்: ஆசனுார் சிட்கோ தொழிற்பேட்டை, 2009ல் துவக்கப்பட்டது. இதில், 93 மனைகளில், 80 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதை விரிவாக்கம் செய்ய, தொழிற்பேட்டையை ஒட்டி, அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை. எனவே, விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறு இல்லை.மணிகண்ணன்: ஆசனுார் தொழிற்பேட்டை அருகே, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு புதிய தொழிற்பேட்டை அமைக்க, அரசு முன்வருமா?அமைச்சர் அன்பரசன்: கனரக வாகனங்கள் செல்லும் வசதியுடன், 15 ஏக்கருக்கு மேல், அரசு புறம்போக்கு நிலம் இருந்தால், 'சிட்கோ' சார்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்க பரிசீலனை செய்யப்படும். மேலும், 20 தொழில் முனைவோர், குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 15 கோடி ரூபாய் வரை மானியம் மற்றும் ஆலோசனைகள் வழங்கி, தொழில் துவங்க ஏற்பாடு செய்யப்படும்.பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில், புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதை பதப்படுத்த, அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்குமா; இப்பகுதியில் விளையும் புளிக்கு, அரசு புவிசார் குறியீடு பெற்றுத் தருமா?அமைச்சர் அன்பரசன்: பென்னாகரம் தொகுதியில், 445 ஏக்கரில் புளி சாகுபடி செய்யப்பட்டு, 2,500 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. புளி பதப்படுத்தும் தொழில் செய்ய, 10 தொழில் முனைவோருக்கு, 34 லட்சம் ரூபாய் மானியத்துடன், 2.89 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.புளி பதப்படுத்தும் தொழில் செய்ய முன்வரும் தொழில் முனைவோருக்கு, ஐந்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. புவிசார் குறியீடு, வேளாண் பொருட்கள், உணவுப் பொருட்கள், விளைபொருட்களுக்கு வழங்கப்படுகிறது.இந்திய அளவில், 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. புவிசார் குறியீடு பெற வழங்கப்படும் மானியத்தை, 25,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கடந்த 19ம் தேதி முதல்வர் அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெற, அப்பொருள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்று இருக்க வேண்டும்.தி.மு.க., - மனோ தங்கராஜ்: கன்னியாகுமரி மாவட்டத்தில், பல வகையான வாழைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தும் வகையில், புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.அமைச்சர் அன்பரசன்: தனியார் தொழில் முனைவோர், தொழிற்சாலைகள் அமைக்க முன்வந்தால் ஆலோசனைகள் வழங்கப்படும். ஐந்து வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்படும். தொழில் முனைவோர், 20 பேர் சேர்ந்து வந்தால், குறுங்குழும திட்டத்தின்கீழ், பொது வசதி மையம் அமைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை