சென்னை : கிராமப்புற பெண்களுக்கு, இலவசமாக 'சானிடரி நாப்கின்' வழங்கப்படும் என்றும், இதற்காக நடப்பாண்டில், 46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது.பட்ஜெட் அறிவிப்பு: எளிதில் செல்ல முடியாத தொலைதூரப் பகுதிகளில், மருத்துவ வசதிகள் கிடைப்பதற்காக வீட்டுக்குச் சென்று சிகிச்சை அளிக்க, 'நடமாடும் மருத்துவமனை' திட்டம் துவங்கப்படும். டாக்டர், செவிலியர், உதவியாளர், ஆய்வுக்கூட தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்ட, மருத்துவக் குழு மற்றும் ஆய்வுக்கூட வசதிகள், இந்த 'நடமாடும் மருத்துவமனை' யில் செய்யப்பட்டிருக்கும். கிராமப்புற பெண்களுக்கு, 'சானிடரி நாப்கின்' இலவசமாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு இந்த ஆண்டு, 46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை, 6,000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 4,000 ரூபாய் ஏழாவது மாதத்திலும், 4,000 ரூபாய் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போதும், மீதமுள்ள 4,000 ரூபாய் குழந்தை பிறந்த 5வது மாதத்திலும் வழங்கப்படும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாடு நிர்வாகத்துக்காக, தனி ஆணையரகம் உருவாக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப உணவு-மருந்துக் கட்டுப்பாடு சோதனைக் கூடங்கள் நவீனப்படுத்தி தரம் உயர்த்தப்படும். இதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, 'முதலமைச்சரின் விரிவான பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு,' 166 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,028 ஆகவும், பேறு காலத்தில் பெண்களின் இறப்பு விகிதம் 1,080 ஆகவும் உள்ளது. இதை மேலும் குறைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தேசிய ஊரக சுகாதார நலத் திட்டத்துக்காக, நடப்பாண்டில் 900 கோடி செலவிடப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.