| ADDED : பிப் 10, 2024 01:07 AM
சென்னை:'பரிவாஹன்' இணையதளத்தில், கடந்த இரண்டு வாரங்களாக அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பெற முடியாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரிவசூல் உள்ளிட்ட சேவைகளை பெற, parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளம் செயலில் உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான, 'டெஸ்ட்' தவிர, பெரும்பாலான சேவைகள் பெறும் வசதியும் உள்ளது. இதற்கான கட்டணத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக, இந்த இணையதளத்தில் அடிக்கடி, 'சர்வர்' பிரச்னை ஏற்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட, சில சேவைகளை பெறுவதில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக, தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் தீர்வு காண, போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுக்கும்' என்றனர்.