| ADDED : ஆக 03, 2011 01:30 AM
சிவகங்கை : ''தென் மாவட்டங்களில் வர்த்தக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், அங்கு பயன்படுத்திய 300 வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்துள்ளோம்,'' என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை மேலாளர் மனோகரன் தெரிவித்தார். ஐ.ஓ.சி., துணை மேலாளர் மனோகரன் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ், சிவகங்கை விற்பனையாளர் மணிமுத்து ஆகியோர் சிவகங்கை வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, கலெக்டர் அலுவலக வளாக டீக்கடை, மஜீத்ரோட்டில் உள்ள கோழி விற்பனை கடைகளில் 11 வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
பின் துணை மேலாளர் கூறுகையில்,'' வீட்டு உபயோகத்திற்கென 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் வழங்குகிறோம். இதன் விலை 797 ரூபாய். இதற்கு அரசு மானியமாக 350 ரூபாய் வரை தருகிறது. மக்களுக்கு 397 ரூபாய்க்கு சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். அதே நேரம் 19 கிலோ எடையுள்ள வர்த்தக சிலிண்டர் 1,300 ரூபாய். இதனால் வர்த்தகர்கள் இதை வாங்குவதில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மதுரை மண்டலத்தின் கீழ் கன்னியாகுமரி முதல் புதுக்கோட்டை வரை 10 மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 300 வீட்டு உபயோக சிலிண்டர்கள் வரை பறிமுதல் செய்துள்ளோம். சிவகங்கையில் 35,000 இணைப்புகள் உள்ளன. மாதத்திற்கு 11 ஆயிரம் சிலிண்டர் வரை சப்ளை செய்கிறோம். தடையின்றி சிலிண்டர் கிடைக்கும்,'' என்றார்.