ஞானசேகரன் தி.மு.க., அனுதாபி முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்
சென்னை: ''மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர், தி.மு.க.,வில் உறுப்பினராக இல்லை; அவர் தி.மு.க., ஆதரவாளர், அனுதாபி என்பதை நாங்கள் மறுக்கவில்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில், அவர் பேசியதாவது:சென்னை அண்ணா நகரில், 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில், விசாரணை அதிகாரி தங்களை தவறாக நடத்தியதாகவும், குற்றம் செய்த சதீஷ் என்பவரை கைது செய்யவில்லை என்றும், சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, வழக்கு கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு மாற்றப்பட்டது. அதன்படி நடந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து, காவல் துறை மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்ற முடிவிற்கு உச்ச நீதிமன்றம் வந்தது. தமிழக காவல் துறையில் இருந்து, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து, விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 103வது வட்டச் செயலர் சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜு என்பவரையும், நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.பல்கலை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.,வில் உறுப்பினராக இல்லை என்பதை நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன். அவர் தி.மு.க., ஆதரவாளர்; தி.மு.க., அனுதாபி. அதுதான் உண்மை; அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன், அரசியல்வாதிகளுடன் அவர் புகைப்படம் எடுத்திருக்கலாம்; அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.க.,வினராகவே இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.எது எப்படியாக இருந்தாலும், குற்றவாளியை நாங்கள் காப்பாற்றவில்லை. உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்ததுடன், குண்டர் சட்டத்திலும் அடைத்திருக்கிறோம். இந்த அரசை பொறுத்தவரை, எந்த கட்சியாக, எந்த தனிப்பட்ட நபராக, காவல் துறையாக இருந்தாலும், பெண்களின் பாதுகாப்புதான் முக்கியம். நாங்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.எதிர்க்கட்சிகள் இந்த அரசை குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்புக்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.