உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை தொடர் உச்சம் சவரன் ரூ.85,000ஐ தாண்டியது

தங்கம் விலை தொடர் உச்சம் சவரன் ரூ.85,000ஐ தாண்டியது

சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஆபரண தங்கம் சவரன் விலை, 85,000 ரூபாயை தாண்டி, 85,120 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 10,430 ரூபாய்க்கும், சவரன், 83,440 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 148 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இவையே தங்கம், வெள்ளி விற்பனையில் உச்ச விலையாக இருந்தன . நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 10,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 84,000 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 149 ரூபாய்க்கு விற்பனையானது. மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 140 ரூபாய் அதிகரித்து, 10,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,120 ரூபாய் உயர்ந்து, 85,000 ரூபாயை தாண்டி, 85,120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு, 1 ரூபாய் உயர்ந்து, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 1,680 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து, கடந்த இரு தினங்களில் மட்டும் சவரனுக்கு, 2,800 ரூபாய் அதிகரித்துள்ளது. சில நாட்களிலேயே, தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் உயர்வது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் விசா தொடர்பான அறிவிப்புகள், உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால், அமெரிக்க பொருளாதாரம் சிறிதளவு வீழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, பங்கு சந்தை சார்ந்த முதலீடுகளை தவிர்த்து, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ