தங்கம் சவரன் விலை ரூ.77,640 8 மாதங்களில் ரூ.20,440 உயர்வு
சென்னை: தமிழகத்தில் நேற்று எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 77,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சவரனுக்கு, 20,440 ரூபாய் அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,620 ரூபாய்க்கும், சவரன், 76,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 134 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் உயர்ந்து, 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில், 77,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 136 ரூபாய்க்கு விற்பனையானது. இந்தாண்டு ஜன., 1ல் தங்கம் கிராம், 7,150 ரூபாய்க்கும், சவரன், 57,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதையடுத்து, கடந்த எட்டு மாதங்களில் மட்டும் கிராமுக்கு, 2,555 ரூபாயும், சவரனுக்கு, 20,440 ரூபாயும் அதிகரித்துள்ளது.