கூகுள் குரோமை வாங்குவதற்கு வலைவீசும் பெர்பிளக்ஸிட்டி ஏ.ஐ., ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்க ஆர்வம்
புதுடில்லி:கூகுள் நிறுவனத்தின் 'குரோம்' தேடுபொறி அதாவது சர்ச் இன்ஜினை, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க அமெரிக்காவை சேர்ந்த பெர்பிளக்ஸிட்டி ஏ.ஐ., நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. கூகுள் குரோம் தேடுபொறியை உலகெங்கும் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் தேடுபொறி வணிகத்தில் கூகுள் ஏகபோகத்துடன் செயல்பட்டு வருவதாகவும், எனவே, குரோம் தேடுபொறியை கூகுள் கட்டமைப்பில் இருந்து பிரிக்க வேண்டும் என்றும், கடந்தாண்டு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது . இதையடுத்து, ஓப்பன் ஏ.ஐ., யாஹூ உள்ளிட்ட சில நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன. தற்போது இந்த வரிசையில் பெர்பிளக்ஸிட்டி ஏ.ஐ., நிறுவனமும் இணைந்துள்ளது. 3 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இது பெர்பிளக்ஸிட்டியின் சொந்த மதிப்பைக் காட்டிலும் அதிகமாகும். சமீபத்திய ஆய்வின் படி பெர்பிளக்ஸிட்டியின் மதிப்பு 1.19 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த பரிவர்த்தனை நடைபெறு வதாக இருந்தால், நிச்சயம் கடன் பெற்றே ஆக வேண்டும். பெர்பிளக்ஸிட்டி ஏற் கனவே 'காமெட்' என்ற ஏ.ஐ., தேடு பொறியை வைத்திருக்கிறது. இந்நிலையில், குரோமை கையகப்படுத்துவது ஏ.ஐ., பரப்பில் நிறுவனத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுளை பொறுத்தவரை, குரோமை விற்பனை செய்யும் எண்ணத்தில் இல்லை. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பெர்பிளக்ஸிட்டி, இதுபோன்று ஆச்சரியப்படுத்தும் வகை யிலான விருப்பங்களை தெரிவிப்பது முதல்முறையல்ல. 'டிக் டாக்' நிறுவனத்துக்கு அமெரிக்காவில் பிரச்னை எழுந்தபோது அதன் வணிகத்தை வாங்க விருப்பம் காட்டியது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்ற இந்தியர் தான் பெர்பிளக்ஸிட்டி யின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். பங்கு சந்தை தரவுகள் இலவசம்
இந்திய பங்குச் சந்தைகள், கிரிப்டோகரன்சி தொடர்பான தகவல்களை பயனர்கள் இலவசமாக பெறலாம் என, அமெரிக்காவை சேர்ந்த ஏ.ஐ., நிறுவனமான பெர்பிளக்ஸிட்டி அறிவித்துள்ளது. எந்தவொரு நிறுவனத்தின் பங்கு விலை, அதன் வரலாற்று தரவுகள் மற்றும் சமீபத்திய வருவாய் உள்ளிட்டவற்றை, பயனர்கள் ஒரே தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.