அரசு ஏ.சி., பஸ் - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு ஏ.சி., பஸ் மற்றும் குவாலிஸ் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் அருகே சேதுபதி அரசு கலைக் கல்லூரி பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வந்த குவாலிஸ் காரும், ராமநாதபுரத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற ஏ.சி., அரசு பஸ்சும் காலை 8.45 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் 47, சின்ன முனியாண்டி 45, ராதாகிருஷ்ணன் 55, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கருமலை, 42, என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவரும் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்கு குழாய் பதிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காரில் ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த அரசு ஏ.சி., பஸ் மீது மோதியதில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.