உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புலன் விசாரணை விவகாரம் டி.ஜி.பி.,க்கு அரசு தரப்பு கடிதம்

புலன் விசாரணை விவகாரம் டி.ஜி.பி.,க்கு அரசு தரப்பு கடிதம்

சென்னை:'முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும், புலன் விசாரணையை விரைவாக முடித்து, சட்ட விதிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:காவல்துறை புலன் விசாரணை செய்யும் பல கடுமையான வழக்குகளில் கூட, சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக, குற்றவாளிகள் எளிதில் ஜாமின் பெற்று, சிறையில் இருந்து வெளியில் வருகின்றனர். காலவரையறைக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாததால், வழக்குகள் ரத்தாகின்றன. அது மட்டுமின்றி, புலன் விசாரணை அதிகாரிகளை கண்டித்து நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்கின்றன.உரிய காலத்துக்குள், இறுதி அறிக்கை தாக்கல் செய்திருந்தால், இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்துக்காக, தொடர் மற்றும் கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், ஜாமினில் வெளிவருவதையும், வழக்குகள் ரத்து செய்யப்பட்டு நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவதையும் தவிர்க்க முடியும்.எனவே, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததும், புலன் விசாரணையை விரைவாக முடித்து, சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, புலன் விசாரணை அதிகாரிகளுக்கும், அவர்களை கண்காணிக்கும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், கமிஷனர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ