மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13-Aug-2025
மதுரை: அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட அதேநாளில், அந்த உத்தரவை அரசே திரும்ப பெற்றதால், வருவாய் துறையினர் குழப்பத்தில் உள்ளனர். தமிழக அரசின் வருவாய் துறையில், 3,000த்துக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழகம் முழுதும், 700 பேர் தான் பணியில் உள்ளனர். அரசின் நலத்திட்ட விழாக்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' போன்ற முகாம்கள், மாவட்டங்களுக்கு வரும் அமைச்சர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகளை வரவேற்பது, வெள்ளம், தீவிபத்து போன்ற பேரிடர் பணிகளின் போதும், அலுவலக உதவியாளர்களே முக்கியமாக தேவைப்படுகின்றனர். இப்பணியிடங்களை நிரப்ப வருவாய்த்துறை அலுவலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த, 2022ல் மூன்று ஆண்டுகளுக்கும் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவு இரண்டு ஆண்டுகளாக கிடப்பிலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த, 22ல் அந்த ஆணையை செயல்படுத்தும் விதத்தில் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா, வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'அனைத்து மாவட்டங்களிலும் மூன்று ஆண்டுகளுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்களே (பொது) நிரப்பிட ஒப்புதல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலம் தாழ்த்தாமல் உடனே பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் துவங்கின. அந்த மகிழ்ச்சி ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. அதேநாள் மாலையில், மற்றொரு கடிதத்தை அரசு துணைச் செயலாளர் நடராஜன், வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பினார். அதில், 'அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தியது திரும்பப் பெறப்படுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், வருவாய் துறையினர் குழப்பத்தில் உள்ளனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் எம்.பி.முருகையன், மாவட்ட தலைவர் கோபி கூறியதாவது: எல்லா பணிகளையும் அதிகாரிகளே செய்ய இயலாது. அலுவலக உதவியாளர் பணியிடம் நான்கில் மூன்று பங்கு காலியாக உள்ளது. அவற்றை நிரப்ப முதல்வர் உத்தரவிட்டும், ஏனோ தள்ளிப்போவதால் மக்கள் தான் பாதிப்படைவர். காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
13-Aug-2025