உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுதும் விரிவடைகிறது அரசு போக்குவரத்து குழும சேவை

தமிழகம் முழுதும் விரிவடைகிறது அரசு போக்குவரத்து குழும சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை பெருநகரில் மட்டும் செயல்படும், 'கும்டா' எனப்படும் அரசு போக்குவரத்து குழும சேவைகளை, தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையை, 2006ல் மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் ஏற்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. முதல் கட்டமாக தமிழக அரசு, சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்துக்கான சட்டத்தை, 2010ல் நிறைவேற்றியது. 'கும்டா' எனப்படும் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம், 2010ல் ஏற்படுத்தப்பட்டது. இதற்கான நிர்வாக அமைப்பை ஏற்படுத்துவது, தனி அலுவலகம் அமைப்பது தொடர்பான எந்த பணிகளும் நடக்காததால், 10 ஆண்டுகளாக இக்குழுமம் முடங்கியது. கடந்த, 2021க்கு பின் தனியான நிர்வாக அமைப்புடன், இக்குழுமம் செயல்பட துவங்கியது.

பாராட்டு

குறிப்பாக, முதல்வரை இதன் தலைவராக நியமித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நிர்வாக அமைப்பில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டன. இதையடுத்து, பல்வேறு துறைகளில் இருந்து அயல் பணி அடிப்படையில் அதிகாரிகளும், ஒப்பந்த முறையில் வல்லுனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரின் தற்போதைய எல்லை மட்டுமல்லாது, விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கும் சேர்த்து, போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டங்களை, இக்குழுமம் உருவாக்கி உள்ளது. இது மட்டுமல்லாது, பல்வேறு துறைகளின் போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்களை ஒருங்கிணைப்பதில், இக்குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, வாகன நிறுத்துமிட கொள்கை, ஒரே டிக்கெட்டில் பல்வேறு போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துதல் போன்ற விஷயங்களில், இக்குழுமம் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இக்குழும செயல்பாடுகள், மத்திய அரசின் பாராட்டுதலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களிலும், போக்குவரத்து சார்ந்த பிரச்னைகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்நகரங்களுக்கு முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து குழுமம் அதில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சாத்தியமா?

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகரில் துவங்கப்பட்ட போக்குவரத்து குழுமத்தின் செயல்பாடு, பல்வேறு நிலைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது, பிற நகரங்களுக்கும் தேவைப்படுகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்கப்படும் நிலையில், அதில் போக்குவரத்து சார்ந்த விஷயங்களுக்கு, 'கும்டா'வின் ஆலோசனை பெறப்படுகிறது. இந்த பின்னணியில், பிற நகரங்களில் தனித்தனியாக போக்குவரத்து குழுமங்களை ஏற்படுத்துவதா அல்லது ஏற்கனவே துவங்கப்பட்ட குழுமத்தின் அதிகார எல்லையை விரிவுபடுத்துவதா என்று, ஆராய்ந்து வருகிறோம். இதனால், மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில், போக்குவரத்து சார்ந்த திட்டமிடல் பணிகளின் தரத்தை மேம்படுத்த முடியும். முதல்வர் தலைமையிலான குழும கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SIVAKUMAR Annamalai
ஏப் 23, 2025 16:34

டிரைவர் வேகன்ஸ் ஹெவி லைசென்ஸ்


P.Palanichamy
ஏப் 22, 2025 10:23

DMK Govt எதை செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு. மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. அதைக் கேட்க இங்கு யாரும் இல்லை.


Sivakumar
ஏப் 22, 2025 05:31

இந்த மசோதாவையும் நம்ப கவர்னர் கிடப்பில் போட்டிருப்பார். நம்ப கவர்னரும் அவற்றின் மூக்கு சொறிதலையும் பாராட்டும் கூட்டம் அதையும் பாராட்டியிருக்கும். வேடிக்கையான மனிதர்களும் அவர்களின் சிதாங்கங்களும்.


கிஜன்
ஏப் 22, 2025 04:46

எதோ கும்தாவா பிளான் பண்றாங்க போல .... குழும சேவை என்பது மல்டி மாடல் போக்குவரத்திற்கு தான் தேவை .... பேரூந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்.... கூவத்தை சுத்தப்படுத்தி படகு விட்டால் படகு கட்டணம் என இருக்கும் சென்னைக்கு அது தேவை .... மற்ற நகரங்களில் ஒரே மாடல் ...ரூட் பஸ் ...டவுன் பஸ் என .... இதில் என்ன கும்டா ?


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 22, 2025 06:08

ஒரு காலத்தில் ரயில் நிலையங்கள் பேருந்து பயணிகளின் கண்ணில் பட்டுவிடாதபடி ராட்சத விளம்பர பலகைகளை வைத்து மறைத்தார்கள். ரயில் நிலையத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் கொண்டுபோய் மத்திய பேருந்து நிலையத்தை கட்டினார்கள். அதெல்லாம் ஒரு காலம்.


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 10:53

ஆற்றை மறித்து நீர்த்தேக்கம் கட்டிவிட்டதால் நீர்வரத்துக்கு வாய்ப்பேயில்லாத கூவத்தை தூய்மைப்படுத்த எக்காலத்திலும் வாய்ப்பில்லை. முழுவதும் மூடிவிட்டு 1 சூப்பர் பாஸ்ட் ரயில் அல்லது சாலையாக ஆக்கலாம். 2.ஆங்காங்கே பூங்காக்களை உருவாக்கலாம். அல்லது ஆக்கிரமித்து குடியிருக்கும் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை