கோவிந்தராஜர் கோவில் கொடிமர பிரச்னை உத்தரவை மீறக்கூடாது என கண்டிப்பு
சென்னை:'சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோவில் கொடிமர விவகாரத்தில், சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அறநிலையத்துறை மீறக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தஞ்சையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில், தில்லை கோவிந்தராஜர் கோவில் உள்ளது. இந்தக்கோவில், அறநிலைய துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜர் கோவிலின் கொடி மரத்தை அகற்றி விட்டு, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்திருப்பதாக, அறநிலைய துறை ஆணையருக்கு, கடலுாரில் உள்ள அறநிலைய துறை இணை ஆணையர் கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு, ஆணையரும் அனுமதி அளித்துள்ளார்.கொடி மரம் தொடர்பாக, வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில், 1860ல் பிரச்னை ஏற்பட்டது. பின், சிதம்பரம் முன்சிப் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. 160 ஆண்டுகளாக அங்கு பிரமோற்சவம் நடக்கவில்லை. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோவிலில் புதிதாக கொடி மரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். திட்டத்தை கைவிட, அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில், 'பிரமோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு, மற்றொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. கொடி மரம் சேதமடைந்துள்ளதால், புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது. இதை மனுவாக தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையில், கோவில் கொடிமரம் அமைப்பது தொடர்பாக, தற்போதைய நிலை தொடர, சிதம்பரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதல் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலைய துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.மனுவை பரிசீலித்த முதல் பெஞ்ச், அதில் பிரமோற்சவம் தொடர்பாக குறிப்பிடவில்லை என்று தெரிவித்ததுடன், கொடிமரம் தொடர்பாக சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறக்கூடாது என்று அறிவுறுத்தியது. வழக்கு விசாரணையை முடித்து வைத்தும் உத்தரவிட்டது.