உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்ப்பிணியர் நிதியுதவி திட்டம்; தவணைகளை குறைத்தது அரசு

கர்ப்பிணியர் நிதியுதவி திட்டம்; தவணைகளை குறைத்தது அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு வழங்கப்படும் முத்துலட்சுமி ரெட்டி திட்ட நிதியுதவி, ஐந்து தவணைகளுக்கு பதிலாக, மூன்று தவணைகளில் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கர்ப்பிணியர் கருத்தரித்த 12 வாரத்துக்குள், ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விபரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, 'பிக்மி' எண் பெற வேண்டும். அப்போது, 2,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.தொடர்ந்து, நான்காவது மாதத்திற்கு பின், இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.உடல் திறனை மேம்படுத்தும் வகையில், சத்துமாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், பாக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய 2,000 ரூபாய் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படுகின்றன.அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவது தவணையாக 4,000 ரூபாய்; குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில், 4வது தவணையாக 4,000 ரூபாய்; குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன், ஐந்தாவது தவணையாக 2,000 ரூபாய் என, 14,000 ரூபாய் ரொக்கம்; 4,000 ரூபாய் மதிப்பிலான பெட்டகம் என, 18,000 ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் இதுவரை, 1.14 கோடி பேருக்கு, 11,702 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்ட நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், பணம் வழங்குவது ஐந்து தவணைக்கு பதிலாக மூன்று தவணையாக குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி, கர்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் 6,000 ரூபாய்; குழந்தை பிறந்த 4வது மாதத்தில் 6,000 ரூபாய்; ஒன்பதாவது மாதத்தில் 2,000 என, 14,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்.அதேபோல், கர்ப்ப காலத்தில், மூன்று மற்றும் ஆறாவது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, கடந்த 16ம் தேதி வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GANESUN
மார் 20, 2024 15:15

தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது… இத்திட்டத்தில் இதுவரை, 1.14 கோடி பேருக்கு, 11,702 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. 'பிரதம மந்திரி வந்தனா யோஜனா திட்ட நிதி' பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ... அப்போ இதுவும் ஸ்டிக்கர்தானா ?


ராம்குமார்
மார் 20, 2024 08:49

ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் உள்ள urban primary health center கர்ப்பிணிகளுக்கு முறையாக பரிசு பெட்டகம் வழங்கவில்லை. பணமும் ஏற்றவில்லை. கேட்டால் வரும் என்று சொல்கிறார்கள்.6 மாத காலம் ஆகியும் முதல் தவணை பணம் ஏற்றவில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை