சென்னை: 'ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பின்னரே முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபாலா. இவர், சங்கராபுரம் காவல் நிலையத்தில், கடந்த மாதம் 25ல் அளித்த புகாரில், 'ச.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவி அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர், என் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் ஈடுபட்டனர்.'அதுகுறித்து கேட்டபோது, வீட்டுக்குள் நுழைந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறியிருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிபாலா வழக்கு தொடர்ந்தார்.விசாரணை இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமின் வழங்கியது குறித்து, கள்ளக் குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜரானார்.கண்டனம் அப்போது அவரிடம், ''காவல் துறையின் எழுத்து பூர்வமான மனுவை சரிபார்த்தீர்களா; மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ் சம்மரி' பெற்று ஆய்வு செய்தீர்களா; இதை சரிபார்க்காமல் எப்படி முன்ஜாமின் வழங்கப்பட்டது,'' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி பி.வேல்முருகன், ''எதிர்காலத்தில் இதுபோல செயல்படக்கூடாது,'' என எச்சரித்தார்.மேலும், அமர்வு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய காவல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய, அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.