உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொங்கும் சோலார் மின் வேலிகள்: யானைகளை கட்டுப்படுத்த திட்டம்

தொங்கும் சோலார் மின் வேலிகள்: யானைகளை கட்டுப்படுத்த திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விவசாய நிலங்களில் யானைகள் நுழைவதை தடுக்க, திண்டுக்கல் மாவட்டத்தில் தொங்கும் சோலார் மின் வேலிகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வனங்களை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகள், விவசாய பணிகள் அதிகரித்து வருகின்றன. வாழிட பரப்பளவு பிரச்னையால் யானைகள், உணவு, தண்ணீருக்காக காட்டை விட்டு வெளியில் செல்கின்றன. இவ்வாறு செல்லும் யானைகள், விவசாய நிலங் களில் தான் அதிகம் நுழைவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க, சூரிய சக்தியில் இயங்கும், 'சோலார்' மின் வேலிகள் அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் விவசாயிகள், அதிக திறன் மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலிகள் அமைப்பதால், யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதை கருத்தில் வைத்து, வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், தொங்கும் சோலார் மின் வேலிகள் அமைக்க, வனத் துறை முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில், யானைகளை கட்டுப்படுத்த தொங்கும் சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை பின்பற்றி, திண்டுக்கல் மாவட்டத்தில், கன்னிவாடி வனச்சரகத்தில் தொங்கும் சோலார் மின் வேலிகள் அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். முதல் கட்டமாக, 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 20 கி.மீ., தொலைவுக்கு மின் வேலிகள் அமைக்கப்பட உள்ளன. விவசாய நிலங்களை ஒட்டி, 10 அடிக்கு ஒரு கம்பம் நிறுத்தப்படும். அதை இணைக்கும் வகையில், சோலார் மின்சார இணைப்பு கொண்ட கம்பிகள் தோரணம் போன்று தொங்க விடப்படும். இந்த கம்பிகள் தரையை தொடாத வகையில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை