உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 மாவட்டங்களில் இரு நாட்கள் கனமழை

12 மாவட்டங்களில் இரு நாட்கள் கனமழை

சென்னை:'வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய 12 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் மக்கினாம்பட்டி, தேனி மாவட்டம் சோத்துப்பாறை பகுதியில் தலா, 4 செ.மீ., மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி செல்ஷியஸ் வரை குறைந்தது. குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளை ஒட்டி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியா குமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.இவ்வாறு அவர் கூறினார். நேற்று மாலை நிலவரப்படி, ஈரோட்டில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை