சென்னை : சென்னை, பெரம்பூர் கண்ணபிரான் தெரு மற்றும் புளியந்தோப்பு நேரு நகரில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: சிவகங்கையைச் சேர்ந்த ஸ்ரீ குமார், மனைவி மலர்விழி உட்பட குடும்பத்தினருடன், திருச்செந்துார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். ஸ்ரீ குமார் மற்றும் மலர்விழி ஆகியோர் மூத்தோர் செல்லும் வழியிலும், குழந்தைகள் பொது வழியிலும் தரிசனம் செய்ய நின்று இருக்கின்றனர்.அந்த சமயத்தில், ஸ்ரீ குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, கோவில் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.'ஸ்ரீ குமார் இருந்த இடத்தில், எவ்வித கூட்ட நெரிசலும் இல்லை. அவருக்கு ஏற்கனவே சுவாசப் பிரச்னை இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தோம்; அவருடைய இறப்புக்கு கூட்ட நெரிசல் காரணம் அல்ல' என, அவருடைய மனைவியே கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.ஏதாவது கிடைக்காதா என்று இலவு காத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்கும் பழனிசாமி போன்ற அரசியல்வாதிகள், உடல்நிலை பாதிப்பால் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்கின்றனர். அக்கறை இருந்தால், ஸ்ரீ குமார் குடும்பத்துக்கு ஏதேனும் உதவப் பாருங்கள்.திருச்செந்தூர் நகரை புனரமைக்க எச்.சி.எல்., நிறுவனம் 10 ஆண்டு காலம் காத்திருந்தது. நம் முதல்வர் அனுமதி அளித்ததும், 200 கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் சார்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, வரும் ஜூலை 7ல் குடமுழுக்கு நடக்க உள்ளது.வழக்கத்தை காட்டிலும் தற்போது, 30 சதவீதம் அளவுக்கு கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள், திருச்செந்துாருக்கு வருகின்றனர். அவர்கள் அவ்வளவு பேருக்கும், தி.மு.க., அரசு உதவி வருகிறது. திருப்பதி போல, திருச்செந்தூரிலும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்கர் விருது கொடுக்கலாம்
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதம் கொடுத்து பல நாட்கள் ஆகின்றன. ஆனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கவன ஈர்ப்புக்கான கோரிக்கையை வைப்பதற்கு, கடிதம் கொடுத்த பின், அவரது அறையில் சந்திக்கின்றனர்.ஒருபுறம், சபாநாயகர் எதிர்ப்பு; மறுபுறம், சட்டசபையில் பேச, சபாநாயகரிடம் அனுமதி கேட்டு அவரது அறையில் சந்திப்பு. இப்படித்தான் அ.தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். தி.மு.க., அரசு மீது குறை கூற ஏதாவது கிடைக்காதா என, பா.ஜ.,வினர் ஏங்கி ஏங்கி சுற்றிக்கொண்டுள்ளனர். இதற்காகத்தான், போராட்டம் நடத்துகின்றனர். உலக அளவில் முதல்வருக்கு வரும் புகழை மடைமாற்றம் செய்ய, அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். தமிழக பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல வெற்றி பட்ஜெட்.-சேகர்பாபு, தமிழக அமைச்சர்